விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட போலீசார், மாலையில் காவல் நிலையங்களில் உட்காராமல் சோதனையில் ஈடுபட வேண்டுமென எஸ்.பி., உத்தரவிட்டதால், போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய பலிக்கு பின், புதிய எஸ்.பி., யாக சசாங்சாய் நியமிக்கப்பட்டு, இரு தினங்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
அன்றைய தினமே ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களை அழைத்து ஆலோசனை நடத்தி, போலீசார் தங்கள் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணி செய்யாத போலீசார் மீது கடும் நடவடிக்கை பாயும் எனக்கூறி, புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று ஒயர்லஸ் மூலம் தொடர்பு கொண்ட எஸ்.பி., 'மாவட்டத்தில் மாலை நேரங்களில், குறிப்பாக 4:00 மணிக்கு மேல் காவல் நிலையங்களில் போலீசார் அமர்ந்திருக்காமல், வெளியே சென்று தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கிராமப்புறங்கள், முக்கிய பிரதான சாலை சந்திப்புகளில் முகாமிட்டு வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். விதி மீறல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி ஒரு போலீசாரும் மாலை நேரங்களில் காவல் நிலையத்தில் அமர்ந்து பொழுதை கழிக்கக் கூடாது. இன்றே உடனே பணியை தொடங்க வேண்டும்' என அதிரடியாக உத்தரவிட்டார்.
எஸ்.பி.,யின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டிய டி.ஐ.ஜி., ஜியாவுல்ஹக், 'குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்துங்கள், சாலை சந்திப்புகள், கிராமப்புறச் சாலைகள், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள், செக் போஸ்ட்டுகள் போன்றவற்றில் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மது கடத்தல், திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை அந்தந்த காவல் நிலையத்திலிருந்து தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து சுறுசுறுப்பான, விழுப்புரம் டவுன் போலீசார் நேற்று மாலை பானாம்பட்டு சாலை சந்திப்பிலும், தாலுகா போலீசார் ஜானகிராம் புறவழிச்சாலை சந்திப்பிலும் சோதனையில் ஈடுபட்டனர். இதே போல், மாவட்டம் முழுவதும் போலீசார் வெளியிடங்களுக்கு வந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.