ராமநாதபுரம், : முதல்வர் ஸ்டாலின் அரசு விழாக்களில் பிளக்ஸ் பேனர், கொடிகளை தவிர்க்க வலியுறுத்தியுள்ளார். இதை மதிக்காத வகையில் ராமநாதபுரத்திற்கு வந்த அமைச்சர்கள் நேரு, ராஜகண்ணப்பனை வரவேற்க ரோட்டை ஆக்கிரமித்து, கண்டபடி கொடிகள், பேனர்களை வைத்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காவிரி குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இவ்விழாவற்கு வந்த அமைச்சர்கள் நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோரை வரவேற்க தி.மு.க., நிர்வாகிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ராமேஸ்வரம், கிழக்குகடற்கரை சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் கலெக்டர் அலுவலக ரோடு வரை அரசு விதி முறைகளை மீறியும் தி.மு.க., கொடி கம்பிகள், பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர். போட்டிக்கு போட்டியாக மாவட்ட அமைச்சர், செயலாளர் ஆதரவாளர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக தங்களின் விசுவாசத்தை காட்ட அரசு விழாவை கட்சி விழாவாக மாற்றினர்.
முதல்வர் ஸ்டாலின் அரசு விழாக்களில் ரோட்டில் பிளக்ஸ் பேனர், கொடிகள் வைக்க கூடாது என கூறியுள்ளார். இதனை மதிக்காமல் தி.மு.க., நிர்வாகிகள் போக்குவரத்திற்கு இடையுறாக பேனர் வைப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.