காரைக்குடி அருகேயுள்ள சூரக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி, சிடி ஸ்கேன், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், டயாலிசிஸ், காது மூக்கு தொண்டை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது. தவிர, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் கீழ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவு செயல்படுகிறது.
இப்பிரிவானது சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை, சிவகங்கை, கண்ணங்குடியில் செயல்படுகிறது. இம்மருத்துவத்தில், ஸ்டீம் பாத், மண் சிகிச்சை, மசாஜ், நறுமண சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபஞ்சர், இயற்கை மூலிகை சிகிச்சை நீராவி பிடித்தல், சூரிய குளியல், வாய் தொண்டை கொப்பளித்தல், சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
யோகா மூலம் கர்ப்பிணிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு எளிதாக சுகப்பிரசவம் நடைபெறுவதோடு பிரசவத்திற்கு பின்பும் தாயின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
காரைக்குடி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவில் 70க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். போதிய இடவசதி இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததோடு, மருத்துவ உபகரணங்கள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டு பயனின்றி கிடக்கிறது.
தவிர, மசாஜ், பிசியோதெரபி, அக்குபஞ்சர் உள்ளிட்ட சிகிச்சைக்கு வெளியே அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதால், மக்கள் சிகிச்சை பெறுவதையே தவிர்த்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறை இருந்தும், அதுகுறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
எனவே, சிகிச்சை முறை வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, போதிய இடவசதி, மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.