ஆளும் பா.ஜ.,வால் கதாநாயகனாகவும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகளால் வில்லனாகவும் சித்தரிக்கப்படும் சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது.
புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழா இன்று நடப்பதால், வழக்கத்தை விட இந்த ஆண்டு, சாவர்க்கரின் பிறந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது.
கடந்த 1883 மே 28-ல், மகாராஷ்டிராவில் பிறந்த சாவர்க்கர், 11 வயதிலேயே, 'வானர சேனை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறுவர்கள் இணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவர். புனேவில் கல்லுாரியில் படிக்கும்போது, அவரது பேச்சுகள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மாணவர்களை கொந்தளிக்க வைத்தது. இதனால், அவர் கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனாலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, 'பாரிஸ்டர்' படிக்க லண்டன் சென்றார். அங்கே தான் அவர் பெரும் தலைவராக உருவெடுக்கிறார்.
லண்டனில் அவர் தங்கியிருந்த, 'இந்தியா ஹவுஸ்' இல்லத்தையே, சுதந்திர போராட்ட களமாக்கினார். லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவர்களை ஒருங்கிணைத்து, 'இந்திய சுதந்திர இயக்கம்' என்ற ரகசிய இயக்கத்தை நடத்தினார்.
இந்தியா ஹவுஸில் பயிற்சி பெற்றவர்கள், லண்டனிலும், இந்தியாவிலும் பிரிட்டிஷ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதன் பின்னணியில் சாவர்க்கர் இருப்பதை தெரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு, அவரை கைது செய்து, கப்பலில் இந்தியா அழைத்து வந்தது. வரும் வழியில், பிரான்ஸ் நாட்டின் மார்ஸ் துறைமுகத்தில் கப்பல் நின்றது. அப்போது கழிப்பறை ஜன்னலை உடைத்து, கடலில் குதித்த சாவர்க்கர், கடலில் நீந்தி கரையை அடைந்தார்.
பிரான்ஸ் காவல் துறையிடம், 'நான் இந்திய அரசியல் தலைவர். எனக்கு அடைக்கலம் வேண்டும்' என்றும் ஆங்கிலத்தில் உரக்க குரல் கொடுத்தார். ஆனால், பிரான்ஸ் போலீசாருக்கு ஆங்கிலம் தெரியாததால், 'திருடன்' எனக் கூறி, அவரை மீண்டும் பிரிட்டிஷ் கப்பலுக்கு கொண்டு சென்றனர்.
கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்ப முயன்றது, சினிமாவையும் மிஞ்சக்கூடிய சாகசம் நிறைந்தது. ஜன்னல் வழியாக குதிப்பதற்காக, பல நாட்களாக உணவை குறைத்து மெலிந்திருந்தார். ஜன்னல் கண்ணாடிகள் குத்தி ரத்தம் வழிந்தோடியபோதும், உப்பு நீரில் கடும் வலியை தாங்கிக் கொண்டு, 15 நிமிடங்கள் நீந்தினார்.
இப்படி அவர் சாகசம் செய்தும் பலன் கிடைக்காததால், 50 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். 12 ஆண்டுகள், அந்தமான் சிறையில், சங்கிலியால் பிணைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டு, பல கொடுமைகளை அனுபவித்தார்.
சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட சாவர்க்கர், ஹிந்துத்துவ அரசியல் சித்தாந்தத்தை முதன்முதலில் முன்வைத்தவர். 1857-ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போராட்டத்தை, 'சிப்பாய் கலகம்' எனக் கூறி, பிரிட்டிஷ் அரசு மறைக்க முயன்றது.
இதை விரிவாக ஆய்வு செய்து, 'இந்திய சுதந்திர போராட்டம் 1857' என்ற நுாலை சாவர்க்கர் எழுதினார். இந்நுால், இளைஞர்களிடம் சுதந்திரத் தீயை பற்ற வைத்தது. பகத்சிங் போன்றவர்களுக்கும் இந்நுால் உத்வேகம் அளித்தது.
சாவர்க்கரை கதாநாயகனாக பா.ஜ., கொண்டாடி வருகிறது. ஆனால், அந்தமான் சிறையில் இருந்து வெளியே வருவதற்காக, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் எனக் கூறி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றன.
மற்ற தலைவர்களைப் போல சாவர்க்கர், வசதிகள் நிறைந்த சிறையில் அடைக்கப்படவில்லை. மாறாக சங்கிலியால் கட்டப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
அந்தமான் சிறையில் இருந்து விடுதலையான பின்னும் சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடவில்லை என்பதை, அவரை கொண்டாடுபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிந்துத்துவத்தை, அரசியல் சித்தாந்தமாக முன்வைத்தவர், ஹிந்துக்கள் ஒற்றுமை வலியுறுத்தியவர் என்பதாலேயே, சாவர்க்கரின் தியாகத்தை மறைத்து, அவரை வில்லனாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சித்தரிப்பதாக, பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது.
ஆதரவாக இருந்தாலும், எதிர்ப்பாக இருந்தாலும் சாவர்க்கரை பற்றிய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. மறைந்து 60 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கிறார் சாவர்க்கர்.