பந்தலூர் : பந்தலுார் அருகே குந்தலாடியில், 'டாஸ்மாக்' கடை கொள்ளையில் துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில், தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே குந்தலாடியில் நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருட முயற்சித்த கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றபோது, போலீசாரை கொள்ளை கும்பல் தாக்கியது.
அதில், இரு போலீசார் காயமடைந்தனர். எஸ்.ஐ. இப்ராஹிம் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டதில், பிஜோஸ், 44, காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். கேரளாவைச் சேர்ந்த இருவர் தப்பினர்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்தை நீலகிரி எஸ்.பி. பிரபாகர் ஆய்வு செய்த நிலையில், நேற்று தடய அறிவியல் ஆய்வக துணை இயக்குனர் சாரதி, உதவியாளர் ஜெய்சன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சாலையிலிருந்த ரத்த மாதிரிகளை ஆய்விற்கு எடுத்தனர். கைரேகை நிபுணர் ரமேஷ் தலைமையிலான குழுவினர், டாஸ்மாக் கடை, தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார், கொள்ளையர்களின் மொபைல் போன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
குற்றவாளிகளை ஐந்து மீட்டர் துாரத்தில் இருந்து துப்பாக்கியில் சுட்டது தெரிய வந்தது. தப்பிய குற்றவாளிகளை கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.