பொள்ளாச்சி : சமூக வலைதளங்களில்,புதிய எண்களில் இருந்து வேலைவாய்ப்பு தருவதாககூறி, வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்டு, நுாதன மோசடியை அரங்கேற்றுகின்றனர். இதுகுறித்து, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
சமூக வலைதளங்களில் மக்கள் அதிக நேரத்தை செலவிடுவதால், அதை பயன்படுத்தி நுாதன மோசடியும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெலிகிராமில் ஒரு புதிய எண்ணில் இருந்து வரும் தகவலில், புதுடில்லியை சேர்ந்த எச்.ஆர்., என அறிமுகப்படுத்திக் கொண்டு, பகுதி நேரம், முழு நேர வேலை வேண்டுமா, என, கேட்கப்படுகிறது.
விருப்பம் தெரிவித்தால்,பகுதி நேரம் என்றால், ஒரு மணி நேரம் - மூன்று மணி நேரம்; முழு நேரமாக, 2 - 5 மணி நேரம் பணியாற்ற வேண்டும். பகுதி நேரத்துக்கு, 3,000 ரூபாயும், முழுநேரத்துக்கு, 5,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின், பிறந்த தேதி கேட்கப்படுகிறது; அதன்பின், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு உள்ளதா என கேட்கப்படுகிறது. அப்போது, சுதாரித்துக்கொண்டு இல்லை என பதில் அளித்தால், வங்கிகள் பெயருடன் கூடிய பட்டியலை அனுப்பி, அதில் எந்த வங்கியில் கணக்கு உள்ளது என கேட்கப்படுகிறது. இதற்கும் இல்லை என பதிலளித்தால், உஷாராகி உரையாடலை 'டெலிட்' செய்துவிடுகின்றனர். தகவல் பரிமாறியதற்கான அடையாளம் இல்லாத அளவில் அழித்து விடுகின்றனர்.
வங்கி கணக்கு உள்ளதா என கேட்கும் போது, 'ஆம்' என கூறி, வங்கி பெயர், கணக்கு எண்ணை கூறினால், 'ஓடிபி' எண்ணை கேட்டு, வங்கி கணக்கில்இருக்கும் பணத்தை சுரண்டி விடுகின்றனர்.
பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி., பிருந்தா கூறியதாவது:
சமூக வலைதளங்களில், அடையாளம் தெரியாத நபர்களின் எண்களில் இருந்து வரும் குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். வங்கி கணக்கு எண், ஒரு முறை கடவுச்சொல் கேட்டால் பகிரக்கூடாது.
இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சைபர் கிரைம் எண், 1930க்கு தகவல்களை தெரிவிக்கலாம். கடன் உதவி, வேலைவாய்ப்பு என, வரும் செய்திகளை நம்பிஏமாறாமல், அந்த எண்ணை 'பிளாக்' செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.