சிதம்பரம் : 'சிதம்பரத்தில் தீட்சிதர் சிறார் திருமண புகைப்படங்களை வெளியிடுவதை தடை செய்ய உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நடராஜர் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அவர் கூறியதாவது:
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது சிறார் திருமணம் குறித்து பதியப்பட்ட வழக்குகள் கைது நடவடிக்கை மற்றும் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.
தற்போது சிறார் திருமணம் சம்பந்தமான புகைப்படங்கள் பொது வெளியில் சட்ட விரோதமாக வெளியிடப்படுகிறது. இது களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மருத்துவ பரிசோதனை நடைபெற்றதா இல்லையா என்பது பற்றி பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் அது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
விசாரணையின் போதே பொது வெளியில் தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை நடந்தது பற்றியும் சிறார் திருமணம் நடந்ததாக சிறார் படங்களை வெளியிடுவதும் தவறு. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
என் அறிக்கைகளில் சிறார் திருமணம் நடைபெறவில்லை என்றோ? நடைபெற்றது என்றோ கூறவில்லை.
சிறார் உரிமை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தேசிய ஆணையத்தில் விசாரணை நிலுவையில் உள்ளபோது போலீஸ் துறையில் உள்ள ஆவணங்கள் மற்றும் மருத்துவ துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுவெளியில் வெளியிட தடை செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற நடவடிக்கை மூலம் தான் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்கும் என தீட்சிதர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
தமிழக போலீசார் இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது. மத்திய புலன் விசாரணை அமைப்பு இதை விசாரிக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.