கோவை : கோவை மாவட்டத்தில், சட்ட விரோதமாக செயல்பட்ட, 142 மதுக்கடை பார்கள் மூடி, 'சீல்' வைக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் கீழ், வடக்கில், 166, தெற்கில், 139 மதுக்கடைகள் உள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட கடைகளில், விதிமுறைக்கு மாறாக, சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் (பார்) நடத்தப்பட்டன.
அரசுக்கு உரிமைத்தொகை செலுத்தாமல், இக்கடைகள் நடத்தப்பட்டதால், லட்சக்கணக்கான ரூபாய், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு, 12:00 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6:00 மணிக்குச் சென்றாலும் மதுக்கூடங்களில், விற்பனை நடந்து வந்தது.
இத்தகவல் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், உரிமைத்தொகை செலுத்தாமல், சட்ட விரோதமாக செயல்படும் மதுக்கூடங்களை ஆய்வு செய்து மூடி, 'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்டத்தில், 77 பார்கள், தெற்கு மாவட்டத்தில், 65 பார்கள் என மொத்தம், 142 மதுக்கூடங்கள் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.