பொள்ளாச்சி : தேனியில் மிரட்டல் விடுக்கும், அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க, பொள்ளாச்சி, டாப்சிலிப்பில் இருந்து, இரண்டு கும்கி யானைகள் செல்கின்றன.
கேரள மாநிலத்தில், 10 பேரை கொன்று அட்டகாசம் செய்த அரிசிக்கொம்பன் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அதனை கண்காணிக்க கழுத்தில் 'ரேடியோ காலர்' பொருத்தி, பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர்.
தற்போது, அரிசிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர் கேம்பில் முகாமிட்டு, கம்பம் நகருக்குள் யானை புகுந்தது. இந்த யானையை விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கும்கி யானைகளை கொண்டு அரிசிக்கொம்பனை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி, டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில் இருந்து இரண்டு கும்கி யானைகளை, கம்பம் பகுதிக்கு அழைத்து செல்கின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரிசிக்கொம்பனை பிடிப்பதற்காக இரண்டு கும்கி யானைகள் வேண்டுமென தேனி வனத்துறையினர் கேட்டு இருந்தனர். டாப்சிலிப்பில் இருந்து, முத்து மற்றும் சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் அங்கு அழைத்து செல்லப்படுகின்றன. கும்கிகளுடன் பாகனங்களும் செல்கின்றனர்,' என்றனர்.