திருப்பூர் : மாநில அரசின், 'வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி' திட்டத்தின் கீழ், அந்தந்த மாவட்டங்களில் செயல்படும், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிலையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள், வட்டார அளவில் பொறுப்பு அலுவலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய பட்ஜெட்டில், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை செயல்பாடுகளை மேம்படுத்த, வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி, பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுவர் என, மாநில அரசு அறிவித்தது.
வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில், புதிதாக வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது; சாகுபடி தொழில்நுட்பம் கற்றுத்தருவது, நோய்களை கட்டுப்படுத்த அறிவியல் ரீதியாக ஆலோசனை வழங்குவது.
விவசாய நிலங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க இயந்திரங்களை பயன்படுத்துவது, விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்குவது.
'ட்ரோன்' வாயிலாக உரமிடுவது, நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் அமைப்பதை ஊக்குவிப்பது, மண் வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கீழ் செயல்படும் நெல், காய்கறி, பழங்கள், தேங்காய், தோட்டக்கலை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவு சார்ந்த ஆராய்ச்சி நிலையங்கள், கே.வி.கே., எனப்படும் வேளாண் அறிவியல் நிலையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு, மாநிலத்தில் உள்ள, 388 வட்டாரத்துக்கும், பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களது விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஓரிரு மாவட்டங்களில், ஒரு விஞ்ஞானிக்கு, இரண்டு வட்டாரங்களை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 'அவர்களது பெயர், பதவி, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை வேளாண் பல்கலை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்; அவர்கள் பணி மாற்றம் செய்யப்படும் போது, உடனடியாக மாற்று விஞ்ஞானிகளை அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும்' என வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், வேளாண் விஞ்ஞானிகளின் செயல்பாடுகளை விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.