ஈரோடு: ''வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு பெற்றதில் உள்ள பிரச்னைகளை தீர்க்க சிறப்பு முகாம் நடத்தியதில், 13 ஆயிரம் பேர் பயன் பெற்றனர்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில், அவர் நிருபர்
களிடம் கூறியதாவது:
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் பிரச்னையில், இரு தரப்பு விவசாயிகளும் பேசி, ஒரு உடன்பாட்டுக்கு வரட்டும் என காத்துள்ளோம். பணியை துவங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் கருத்துக்காக காத்துள்ளோம். அந்தியூர் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் அமைப்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பட்டா, பத்திரம் பெறுவது உட்பட பல பிரச்னைகள் இருந்தது. இதற்கு தீர்வு காண அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்தியதில், 13 ஆயிரம் பேருக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டு வசதி வாரியம் தொடர்பான விற்பனை பத்திரங்கள், நிலம் கையகப்படுத்துதல், வீடு ஒதுக்கீடு, ஆக்கிரமிப்பு போன்ற குறைகளுக்கு தீர்வு காண, மனுக்கள் பெற சென்னை உட்பட, 15 இடங்களில் புகார் பெட்டி வைக்கப்படுகிறது. வரும், 3 முதல், 30 வரை பெட்டிகள் வைத்து, மனுக்களை சேகரித்து, 10 நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழு பரிசீலித்து தீர்வு காணும்.
வீட்டு வசதி வாரியத்துக்கு மாநிலத்தில் விற்கப்படாத, 8,000 மனைகள் மற்றும் நிலங்கள் உள்ளன. வாரிய அலுவலகங்களை அணுகி, பொதுமக்கள் சலுகை விலையில் வீடுகளை வாங்கலாம். காலி மனைகள், வீட்டு வசதிக்காக பயன்படுத்தப்படும். ஈரோடு, முத்தம்பாளையம் வீட்டு வசதி காலனியில் அணுகு சாலை அமைக்கப்படும்.
ஈரோடு, சம்பத் நகரில் வாரிய நிலத்தை பயன்படுத்திய பள்ளி நிர்வாகம், 1997 முதல், 3.90 கோடி ரூபாய் வாடகை செலுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படியே வாடகை கேட்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாததால், பள்ளியை சீல் வைத்துள்ளனர். தொகையை செலுத்தினால் சீல் அகற்றப்படும்.
இவ்வாறு கூறினார்.