பெருந்துறை: பெருந்துறையில் உள்ள தனியார் வங்கியில், கோல்டு லோன் எக்ஸிகியூட்டிவாக வேலை செய்பவர், சில்லாங்காட்டு புதுாரை சேர்ந்த நடராஜ், 29. நேற்று முன்தினம் காலை, நடராஜை தொடர்பு கொண்டு ஒரு பெண், விஜயமங்கலம் முத்துார் பின்கார்ப்பில், 30 பவுன் நகை வைத்துள்ளதாகவும், அதில் ஒரு பகுதியை உங்கள் வங்கிக்கு மாற்றி வைக்க விருப்புவதாக மொபைல் போனில் பேசியுள்ளார்.
பின் நகையை மீட்டு, தங்கள் வங்கியில் அடமானம் வைக்க, தேவையான ஒரு லட்சத்து, 10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, தன் பைக்கில் நடராஜ், அவர்கள் வர சொன்ன பெருந்துறை, பொன்முடி ரோட்டிற்கு சென்றார். அங்கு வைத்து, அடையாளம் தெரியாத மூவர், பணத்தை பறித்துக் கொண்டு, காரில் தப்பினர். பெருந்துறை போலீசில் நடராஜ் புகார் செய்தார்.
போலீசார் விசாரித்து, மொபைல் போனில் பேசி வர சொன்ன பெருந்துறை அடுத்த, முருகம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி செங்காவேரி, 30, அவருக்கு உடந்தையாக இருந்த திருப்பூர் மாவட்டம், நெருப்பாச்சியை ரத்தீஷ்குமார், 30, கணக்கம்பாளையம், குட்டை தோட்டை சேர்ந்த சரண்நித்திஷ், 22, வண்ணன்காட்டை சேர்ந்த மணிகண்டன், 25 ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து, 10 ஆயிரத்தை கைப்பற்றினர்.
நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.