கோபி: பேஸ்புக்கில் பழக்கமான காதலனை தேடி, கோபிக்கு வந்த கேரள இளம் பெண்ணை, அனைத்து மகளிர் போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி பஸ் ஸ்டாண்டில் கடந்த, 26ம் தேதி நீண்ட நேரமாக நின்றிருந்த, 25 வயது பெண்ணை, கோபி மகளிர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், 'அந்த பெண் கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த சரண்யா, 25, என தெரியவந்தது. அவர் பி.காம்., படித்துள்ளதாகவும், கோபியை சேர்ந்த வாலிபரிடம், அவருக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது. அதனால், திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட சரண்யா, காதலனை தேடி கோபி வந்துள்ளார்.
அந்த காதலனும் கோபி பஸ் ஸ்டாண்ட் வருவதாக, சரண்யாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த காதலன் வரவில்லை. அதனால் செய்வதறியாது கோபி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்ததாக சரண்யா, மகளிர் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர், இடுக்கி மாவட்டம், பெருமேடு பகுதி போலீசாருக்கு, மகளிர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே தனது மகள் மாயமானதாக, சரண்யாவின் பெற்றோர் அங்கு புகாரளித்திருந்தனர். இதையடுத்து பெருமேடு போலீசார், சரண்யாவின் தாயார் எலிசபெத் ஆகியோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் வந்து, சரண்யாவை அழைத்து சென்றனர்.