புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை முன் உள்ள பூங்கா மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி பகுதிகளில், தினமும் இரவில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, அணை பூங்காவின் காம்பவுண்ட் சுவரை உடைத்து தள்ளியதோடு, போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி முன்புற இரும்பு கேட், காம்பவுண்ட் சுவரை சேதப்படுத்தியது.
தினமும் இரவில், பவானிசாகர் அணை பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் மக்னா யானை முகாமிடுவதால், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். தந்தம் இல்லாததால், மக்னா' யானை என வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், போலீஸ் குடியிருப்பு எதிரில் உள்ள தோட்டத்தில் புகுந்து, விவசாயி சுப்பையனை மக்னா யானை தாக்கியதால், பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மக்னா யானை நடமாட்டத்தை, வனத்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மக்னா யானையை, கும்கி யானைகள் மூலம் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள, 10 வனச்சரகங்களில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால், யானைகள் வனப்
பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், பண்ணாரி அருகே குய்யனுார் பிரிவு அருகில், வனப்பகுதியில் இருந்து யானைகள் குட்டிகளுடன் வெளியேறி சாலையோரம் முகாமிட்டிருந்தது.
யானைகள் நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள், மொபைல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். வன விலங்குகளை கண்டால் அருகில் சென்று போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது, எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.