10 ஆயிரம் வீதம், 50 ஆயிரம் ரூபாயை ஈரோடு எஸ்.பி., ஜவஹர் வழங்கினார்.
140 மதுபான பாட்டில் பறிமுதல்
21 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு மாவட்ட மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் டாஸ்மாக் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்றதாக, 20 பேர் மீதும், கர்நாடகா மாநில மதுபாட்டில்களை வைத்திருந்ததாக ஒருவர் என மொத்தம், 21 வழக்குகள் பதிவு செய்தனர். மூன்று கர்நாடகா மாநில மதுபான பாட்டில் உள்ளிட்ட, 140 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஓய்வு பி.எஸ்.என்.எல்.,
ஊழியர் விபரீத முடிவு
பவானி அருகே ஒலகடம், எட்டிக்குட்டை பாலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 57; பி.எஸ்.என்.எல்.,ல், டி.டி.யாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்று, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த ரங்கசாமி, மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறி, வீட்டில் இருந்து சென்றவர் திரும்பவில்லை.
இந்நிலையில், பவானி ஜீவா நகரையொட்டிய காவிரியாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்ததில், ரங்கசாமி என்பது தெரிந்தது. முதல் கட்ட விசாரணையில், கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்
பவானிசாகர் சட்டசபை தொகுதி, சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் தனியார் மண்டபத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கோபி எம்.எல்.ஏ.வும்,மேற்கு மாவட்ட செயலருமான செங்கோட்டையன் பேசுகையில்,''அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், 39 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,கூட்டணி தான் வெற்றி பெறும். 2026ல் அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமைக்க மக்கள் தயாராகி விட்டனர்,'' என்றார். ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்தியூரில் ஜமாபந்தி முகாம்
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில், வெள்ளித்திருப்பூர், கொமராயனுார், மாத்துார், நெரிஞ்சிப்பேட்டை, ஆரியகவுண்டனுார் பகுதி மக்களுக்காக நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்டோர் வந்து, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். அப்போது அங்கு வந்த அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், 'பொதுமக்கள் முகாமில் வழங்கியுள்ள மனுக்கள் மீது, காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பைக்கை இழுத்து சென்ற
காட்டாற்று வெள்ளம்
கடம்பூர் அருகே, காட்டற்று வெள்ளம் பைக்கை இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்துள்ளது மாக்காம்பாளையம் மலை கிராமம். இங்கு, 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தையொட்டி குரும்பூர், கோம்பையூர், கோம்பைதொட்டி, கோவிலுார், அரிகியம் ஆகிய மலைக்கிராமங்கள்உள்ளன. மாக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகள் குறுக்கே ஓடுகிறது.
மழை பெய்யும் சமயங்களில் இரண்டு காட்டாறுகளிலும் வெள்ளம் கரை புரண்டோடும். அப்போது போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவது வாடிக்கை. நேற்று முன்தினம் வனப்பகுதியில் பெய்த கன மழையால், சக்கரை பள்ளத்தில் மழை நீர் ஓடியது. அப்போது மாக்கம்பாளையத்தை சேர்ந்த இளைஞர், பைக்கில் காற்றாட்டை கடந்து சென்ற போது மழை வெள்ளம் இழுத்து சென்றது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரை சேர்த்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வாய்க்கால் அருகே ஆண் சடலம்
மொடக்குறிச்சி பேரூராட்சி, பஞ்சலிங்கபுரம் அருகே பட்டாணி வயல் பகுதியில், மகேஷ் குமாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள வாழைத்தோப்பு காட்டின் அருகே, சிறிய வாய்க்கால் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியது. சாத்தம்பூர் வி.ஏ.ஓ. பூபதி ராஜா, மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி சென்ற போலீசார், வாய்க்கால் அருகே கிடந்த அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை
கண்டுபிடித்தனர்.
அந்த இடத்திலேயே டாக்டர் சங்கர் தலைமையில், பிரேத பரிசோதனை செய்து பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த ஆண், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
பழநி தேவஸ்தான நிர்வாகம்
நாட்டு சர்க்கரை கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 17.30 லட்சம் ரூபாய்க்கு, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், நாட்டு சர்க்கரையை நேற்று கொள்முதல் செய்தது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,720 முதல், 2,730 ரூபாய் வரை ஏலம் போனது. இரண்டாம் தரம், 2,600 முதல், 2,650 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 642 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 17.30 லட்சம் ரூபாய்க்கு, கொள்முதல் செய்ததாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைத்தேன் கடித்து
ஐந்து பேர் காயம்
வெள்ளகோவில் அருகே, வள்ளியரச்சல் கிராமத்தை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், 10 பேர் நேற்று காலை ஓலப்பாளையம் அருகே, தண்ணீர்பந்தல்வலசு கிராமத்தில் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு தென்னை மரத்திலிருந்து மலைத்தேன் பூச்சிகள் பறந்து வந்துள்ளன. மரங்களில் தேங்காய் பறித்து கொண்டிருந்த சுரேஸ், 31, குருநாதன், 59, முத்துசாமி, 60, மதன்குமார், 19, சதீஷ்குமார், 27 ஆகியோரை மலைத்தேன் பூச்சி கடித்துள்ளது. வலியால் துடித்த ஐந்து பேரும், வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
வி.ஏ.ஓ.,
ஆபீஸ் அருகே
டூவீலர் திருட்டு
வெள்ளகோவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி, 49. இவர் நேற்று முன்தினம் காலை, 8:00 மணியளவில் அலுவலகம் முன் தனது எக்ஸ்.எல். சூப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு, காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். பணியை முடித்துக் கொண்டு மாலை, 5:00 மணிக்கு வந்து பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
வெள்ளகோவில் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி, ஸ்வீட்ஸ், பப்ஸ் தயாரிப்பு கடைகளில், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட முட்டைகளால், பப்ஸ் வகைகள் தயாரிக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் ஆய்வு செய்தார்.
ஆய்வில், பப்ஸ் வகைகளை உரிய முறையில் தயாரிக்காமல் முட்டை வெளியே தெரியும்படி மைதா மாவில் தயாரிக்கப்படும் பப்ஸ் வகைகளை, தொடர்ந்து ஓவனில் வைத்து சூடேற்றும்போது, முட்டையின் வெள்ளை கருவானது தொடர்ந்து சூடேறி பிளாஸ்டிக் போன்று கெட்டியாகி விடுகிறது. அவ்வாறு தயாரிக்காமல் உரிய முறையில் உணவு பாதுகாப்பு விதிகளின்படி, உரிய முறையில் முட்டை முழுவதுமாக மூடி உள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் பப்ஸ் மற்றும் எண்ணெய் பலகாரங்களை, நாளிதழ்களில் வைத்து உண்பதற்கு கொடுத்ததற்காக மூன்று கடைகளுக்கு தலா, 1,000 வீதம், 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறு பேனர்கள் அகற்றம்