கரூர்: சி.ஐ.டி.யு., நடைபயண பிரசாரத்திற்கு காந்திகிராமத்தில்
ஏ,ஐ,டி.யு.சி., சங்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
கரூர் காந்திகிராமம் பஸ் ஸ்டாப்பில், சி.ஐ.டி.யு., சார்பில் கரூர் வழியாக திருச்சி நோக்கி செல்லும் நடை பயண பேரணிக்கு, ஏ.ஐ..டியு.சி., கரூர் மாவட்ட தலைவர் வடிவேலன் தலைமையில் வரவேற்பு அளித்தனர். முன்னதாக, தொழிலாளர்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தமிழ்நாட்டின் ஏழு முனைகளில் இருந்து மே, 20 முதல், 30 வரை, 2,100 கி.மீ., வரை நடை பயண பிரசாரத்தை சி.ஐ.டி.யு., மேற்கொண்டு வருகிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடவும் தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்திடவும், அரசு பொது துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பிடவும், நிரந்தர தன்மை உள்ள பணிகளில் தனியார் மயத்தை புகுத்தாமல் இருக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நடைபயண பிரசாரம் நேற்று கரூர் வந்தடைந்தது. மதியம், 1.00 மணி அளவில் கரூர் சுங்க கேட் வழியாக காந்திகிராமம் பகுதியில் திருச்சி நோக்கி நடைபயண பிரசாரம் சென்றபோது வரவேற்பளித்தனர். மா.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் ஜோதிபாசு,
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலர் முருகேசன், கரூர் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.