கரூர்: அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டிகளில், இந்தியன் வங்கி ஆண்கள் அணியும், கோல்கட்டா வடக்கு ரயில்வே பெண்கள் அணியும் வெற்றி பெற்றது.
கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில், 63 வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி, திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த, 22ல் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில், எட்டு ஆண்கள் அணி, ஐந்து பெண்கள் அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு இறுதி போட்டிகள் நடந்தன. போட்டியை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கான இறுதி போட்டியில், கோல்கட்டா வடக்கு ரயில்வே அணியும், ஹூப்ளி தெற்கு ரயில்வே அணியும் மோதின. அதில், கோல்கட்டா வடக்கு ரயில்வே அணி வெற்றி பெற்றது. ஆண்களுக்கான இறுதி போட்டியில், இந்தியன் வங்கி அணியும், இந்தியன் ஏர்போர்ஸ் அணியும் மோதின. அதில், இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூடைப்பந்து கழக தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் இந்திர மூர்த்தி, கமாலுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.