இலவச மருத்துவ முகாம்
மேட்டு மருதுாரில், மகளிர் மகப்பேறு மற்றும் சிறுநீரகவியலுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மருதுார் டவுன் பஞ்., மற்றும் வீடு தொண்டு நிறுவனம் இணைந்து, மேட்டுமருதுாரில் மகளிர் மகப்பேறு, சிறுநீரகவியலுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தின. 'வீடு' தொண்டு நிறுவன இயக்குனர் வினோத்குமார் தலைமை வகித்தார். மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா முகாமை தொடங்கி வைத்தார். சமயபுரம் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் லோகபுஷ்பாஞ்சலி, சுந்தர், காயத்ரி ஆகியோர் பரிசோதனை நடத்தி, உரிய சிகிச்சை அளித்தனர். டவுன் பஞ்., செயல் அலுவலர் விஜயன், இளநிலை உதவியாளர்கள் சேட்டு, சரவணகுமார், வீடு தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மழைநீர் சேமிப்பு குளத்தில்
முட்செடிகள் அகற்றப்படுமா?
கோவக்குளம் பகுதியில், மழைநீர் சேமிக்கும் குளத்தில் முட்செடிகள் வளர்ந்து வருவதால் மழைநீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளத்தில், மழைநீர் சேமிக்கும் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் வரும் தண்ணீரை, குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. தேக்கிவைக்கப்படும் தண்ணீர் மூலம் அப்பகுதி விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்த்தப்படுகிறது. தற்போது, குளத்தில் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, குளத்தில் உள்ள முட்செடிகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானாவாரி விவசாயிகள்
கோடை உழவு துவக்கம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் தொடர் மழையால், மானாவாரி விவசாயிகள் கோடை உழவை துவக்கி உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட லாலாப்பேட்டை, வல்லம், கொம்பாடிப்பட்டி, மேட்டுப்பட்டி, வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி ஆகிய கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு, மழை பெய்தது. இதனால், மானாவாரி விவசாயிகள், நிலங்களில் சாகுபடி பணியை துவங்கும் வகையில், உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால், மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி நடக்கும் என, விவசாயிகள் கூறினர்.
க.பரமத்தி வடக்கு ஒன்றிய
பா.ஜ., செயற்குழு கூட்டம்
க.பரமத்தி வடக்கு ஒன்றிய, பா.ஜ., செயற்குழு கூட்டம், தலைவர் செல்வி பழனிசாமி தலை மையில், பவித்திரத்தில் நேற்று நடந்தது.
அதில், க.பரமத்தியில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும், பவித்திரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும். பெரிய தாதம்பாளையம் ஏரியில் உள்ள, சீமை கருவேல மரங்களை வெட்டி, அமராவதி ஆற்றுநீரை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை, குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் நாதன், பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், செயலாளர் தங்கவேல், ஒன்றிய பொதுச்செயலாளர் மணி, பொருளாளர் கண்ணுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
குண்டும், குழியுமான சாலை: அம்மன் நகர் மக்கள் அவதி
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, அம்மன் நகரில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமப்படுகின்றனர். மேலும், குறிப்பிட்ட துாரம் வரை மிகவும் மோசமான நிலையில் சாலை உள்ளது.
இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோசமாக உள்ள சாலையை, சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில், செயலாளர் அசோகன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடை களில், அரசு அனுமதி இல்லாமல் உள்ள, பார்களை மூட வேண்டும், தாபா கடைகளில், வெளிநாட்டு மது வகைககள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்து, கண்ணன், ஐ.டி., விங்க் செயலாளர் கவின் உள்பட பலர் பங்கேற்றனர்.