நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில், 343.70 மி.மீ., மழை பெய்தது. குறிப்பாக, கலெக்டர் அலுவலக பகுதியில், 117.50 மி.மீ., மழை பெய்து கொட்டி தீர்த்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கத்தரி வெயில், கடந்த, 4ல் துவங்கியது. அன்று முதல் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், மழையுடன், கத்தரி வெயில் துவங்கியது. இருந்தும், வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக, 104 டிகிரி, 'பாரன்ஹீரட்' வெப்பநிலையை எட்டியது. அதனால், மக்கள் கடும் வெயிலில் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கிடையே, அவ்வப்போது, இரவு நேரங்களில் லேசான மற்றும் கனமழை பெய்து, சூட்டை தணித்து வந்தது.
நேற்று முன்தினம் காலை முதல், வெயில் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, மழை பெய்யத்துவங்கியது. தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால், தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக, நாமக்கல் கலெக்டர் அலுவலக பகுதியில், 117 மி.மீ., மழை பதிவானது.
மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:
எருமப்பட்டி, 25, குமாரபாளையம், 2.40, மங்களபுரம், 2.80, நாமக்கல், 50, புதுச்சத்திரம், 52, ராசிபுரம், 38, சேந்தமங்கலம், 52, கலெக்டர் அலுவலகம், 117.50, கொல்லிமலை, 4 என, மொத்தம், 343.70 மி.மீ., மழை பெய்தது.