நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நுாற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு, இந்தியாவுக்கே முன்னோடி தலைவர் என்று சொன்னால் கருணாநிதிதான் என, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறினார். தமிழகத்தில் இருக்கக்கூடிய வருவாயில், கொங்கு மண்டலம், மூன்றில், இரண்டு பங்கு வருவாய்க்கு அச்சாரமாக உள்ளது.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில், சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும். மேலும், பழைய கொடிகளை அகற்றிவிட்டு, அனைத்து கம்பங்களிலும், கட்சிக்கொடியை ஏற்ற வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
நாமக்கல் செலம்பகவுண்டர் பூங்காவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவுவதற்கு, கலெக்டரிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெற்று, சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.