சேந்தமங்கலம்: கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருவதால், 'ஆகாய கங்கை' நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமான கொல்லிமலை, கடல் மட்டத்திலிருந்து, 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கோடை விடுமுறையால், கொல்லிமலைக்கு நாமக்கல், திருச்சி, சேலம், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொல்லிமலை சுற்றுவட்டார ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, 'ஆகாய கங்கை' நீர்வீழ்ச்சியில், 200 அடி உயரத்திலிருந்து அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவியில், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.