மோகனுார்: மோகனுார் அடுத்த ஒருவந்துார் காவிரியாற்றில், கடந்த, 19 முதல், அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு அள்ளப்படும் மணல்கள், டிப்பர் லாரிகள் மூலம், நாவலடியான் கோவில், முத்துராஜா தெரு, அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வளையப்பட்டி சாலையில் உள்ள செவிட்டுரங்கன் பட்டி கூட்டுறவு வங்கி அருகே, இரண்டாம் விற்பனைக்காக இருப்பு வைக்கப்படுகிறது.
அவ்வாறு டிப்பர், டாரஸ் போன்ற லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லும்போது, மணல் கொண்டு செல்லும் வாகனங்களில், மணல் துகள்கள் பறக்காமல் இருப்பதற்கு, படுதா போட்டு மூடிக்கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், அவ்வாறு எந்த வாகனங்களும், படுதா போட்டு மூடுவதில்லை. இதனால், லாரியில் இருந்து பறக்கும் மணல் துகள்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கண்களை பதம் பார்ப்பதுடன், வீடுகளுக்குள் பரவுகிறது. அதனால், குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அவற்றை தவிர்க்க, சாலையில் அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மாலை, 4:30 மணிக்கு, மோகனுார் முத்துராஜா தெருவை சேர்ந்த, முன்னாள் டவுன் பஞ்., கவுன்சிலர் குமார், தன் வீட்டு முன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் தேவநதான் மற்றும் பொதுமக்கள் இணைந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மணல் குவாரி பணியாளர்கள், பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக லாரி மூலம் சாலையில் தண்ணீர் விடப்பட்டது.
அதையடுத்து, அரை மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.