நாமக்கல்: ''லாரிகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக்கோரி, வரும் ஜூன், 6ல், சென்னையில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது,'' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழக தலைவர் தன்ராஜ் கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்படும்போது, வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல், ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு, தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது.
போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள், வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல், 'ஆன்லைன்' மூலம் அபராதம் விதிக்கின்றனர். மேலும், டி.ஜி.பி.,யை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால், ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. அவற்றை கண்டித்து, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், வரும், ஜூன், 6ல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து, மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.,) சேர்மன் சண்முகப்பா ஆலோசனைப்படி, காலவரையற்ற லாரி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளாளர் தாமோதரன் உள்பட பலர் உடனிருந்தனர்.