பள்ளத்தில் இறங்கிய லாரி
குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலையில், நேற்று காலை, 11:௦௦ மணியளவில் கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி, கத்தேரி பிரிவு பஸ் ஸ்டாப் அருகே பள்ளத்தில் இறங்கியது. அதன் டிரைவர் முயற்சித்தும், லாரி சாலையின் மேல் ஏற முடியாமல் திணறியது. தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், சென்னையை சேர்ந்த லாரி டிரைவர் பாலாஜி, 58, என்பவரிடம் விசாரித்ததில், கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி, ஆந்திரா மாநிலம், குண்டூரிலிருந்து, கோவைக்கு சென்றது தெரியவந்தது. பின், பொக்லைன் இயந்திர உதவியுடன் லாரி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
கொல்லிமலையில்
'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு
கோடை விடுமுறையை முன்னிட்டு, கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், வனத்துறையின் சார்பில் ஆகயா கங்கை நீர்வீழ்ச்சி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வனச்சரக அலுவலர் சுப்பராயன் தலைமை வகித்தார். கொல்லிமலை வனச்சரகத்துக்குட்பட்ட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிபை பயன்பாடு தவிர்ப்பு, துணி பைகளின் நன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ராசிபுரம் நகராட்சி குப்பையை
பொக்லைன் மூலம் அகற்ற முடிவு
ராசிபுரம் நகராட்சி குப்பையை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராசிபுரம் நகராட்சியின் நகர்மன்ற கூட்டம், சேர்மன் கவிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் மழை உள்ளிட்டவைகளால் சேதமடைந்த, 4,240 மீட்டர் தார் மற்றும் கான்கிரீட் சாலைகளை, 1.71 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கவும், ராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் நகராட்சி சுகாதார பொது பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை, பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட, 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுகாதார அலுவலர் செல்வராஜ், மேலாளர் வசந்தா, நகராட்சி உதவி செயற்பொறியாளர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.