கரூர்: கரூரில், தி.மு.க.,வினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த, நான்கு வருமான வரித்துறை
அதிகாரிகளுக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரூரில் உள்ள, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை சோதனை நடத்த
சென்றனர்.
அப்போது, அனைத்து இடங்களிலும், வருமான வரித்துறை அதிகாரிகளை, சோதனை
நடத்த விடாமல், தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். அதில், காயமடைந்த வருமான வரித்துறை ஆய்வாளர்கள் காயத்திரி, கல்லா சீனிவாசராவ், அதிகாரிகள் சுனில்குமார், பங்கஜ்குமார் ஆகிய நான்கு பேரும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு நேற்று காலை முதல், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு
கரூரில் நடந்த மோதல் தொடர்பாக, வருமான வரித்துறையினர் மற்றும் தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்த, நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறையினரை விரட்டியடித்தனர்.
இதில் வருமான வரித்துறை ஆய்வாளர் காயத்திரி, அதிகாரிகள் சுனில்குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ஆகியோர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் நடந்த தள்ளுமுள்ளுவின் போது, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக, தி.மு.க., தொண்டர் குமார், 48 என்பவரும் காயமடைந்தார்.
இந்நிலையில், வருமான வரித்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த், ஆய்வாளர்கள் காயத்திரி, கல்லா சீனிவாசராவ் ஆகியோர் கொடுத்த புகார்படி, அடையாளம் தெரியாத, 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் மீதும்; தி.மு.க., தொண்டர் குமார் கொடுத்த புகார்படி, அடையாளம் தெரியாத வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.