வேலுார்:வேலுார் அருகே பாம்பு கடித்து இறந்த பெண் குழந்தையை, சாலை வசதி இல்லாததால், 10 கி.மீ., துாரம் தாய் சுமந்து சென்றார்.
வேலுார் மாவட்டம், அல்லேரி மலை அடுத்த அத்திமரத்துாரைச் சேர்ந்தவர் விஜய், 32. இவரது மனைவி பிரியா, 30. இவர்களது மகள் தனுஷ்கா, 2. கடந்த, 26ல் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, குழந்தையை பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாத நிலையில், 30 கி.மீ., துாரத்திலுள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே குழந்தை இறந்தது.
வேலுார் அரசு மருத்துவமனையில், உடற்கூறு ஆய்வுக்குப் பின், குழந்தை உடலைஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்திமரத்துாருக்கு சாலை வசதி இல்லாததால், 10 கி.மீ., துாரத்திற்கு முன்பாக, குழந்தை உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை பறிகொடுத்த நிலையில், குழந்தையின் உடலையும், 10 கி.மீ., துாரம் தாய் சுமந்து சென்றார். குழந்தையின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம், பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.