சாத்துார் : சாத்துார் அருகே தாமிரபரணி குடிநீர் திட்ட பகிர்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
சாத்துார் நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகமாகி வருகிறது. இதனால் நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறைந்த அளவு குடிநீரை வைத்து 5 நாட்களுக்கு ஒரு முறை பகுதி வாரியாக நகராட்சி குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் சாத்துார் நகராட்சிக்கு வழங்கப்படும் 5 லட்சம் லிட்டர் குடிநீரும் ஆங்காங்கே குழாய்கள் உடைப்பு ஏற்படுவதால் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அவல நிலை உள்ளது. நகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு குழாய் உடைப்பு ஏற்படுவதை கண்காணிக்க வேண்டும்.
குழாய் உடைப்பு ஏற்பட்டவுடன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது சாத்துார் நகராட்சிக்கு வரும் தாமிரபரணி திட்ட குழாய் சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழி சாலையில் சத்திரப்பட்டி கிராமம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணான நிலையில் தற்போது மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.