விருதுநகர் : குழாய் பதிக்க சேதமான ரோடு, நிரம்பி வழியும் வாறுகால், 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் என விருதுநகர் நகராட்சி 34வது வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த வார்டில் கிருஷ்ணமாச்சாரி மெயின் ரோடு, 2,3,4வது தெருக்கள், நகராட்சி அலுவலகம் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். இத்தெருக்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிப்பதால் தட்டுப்பாடு நிலவுகிறது. தெருக்கள் அனைத்தும் குடிநீர் திட்டப்பணிக்கு தோண்டப்பட்டதால் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளன.
வாறுகால்களை முறையாக துார்வாராததால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தெருவில் வாறுகால் தடுப்புச் சுவர் இன்றி விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதில் பிளாஸ்டிக் குப்பை தூர்வாரப்படாமல் தேங்கி நிற்கின்றன. இதனால் சுகாதாக்கேடு உள்ளது. நாய்த்தொல்லை அதிகரித்துள்ளதால் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வரை அனைவரும் அச்சப்படும் நிலை உள்ளது.
பாதாளசாக்கடை இருந்தும் கழிவுகள் அனைத்தும் வாறுகாலில் தான் கலக்கிறது. தெரு விளக்குகளில் எல்.இ.டி., விளக்குகள் மாற்ற வேண்டும். ஆகவே நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைத்து, வாறுகாலை முறையாக துார்வாரி, நாய்த்தொல்லையை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருக்களில் கண்காணிப்பு கேமரா வசதி, போலீசார் ரோந்து அவசியம் தேவைப்படுகிறது. சில தெருக்களில் வாறுகால் தடுப்புச் சுவர் இன்றி விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வாறுகால் வசதிகளை முழுமைப்படுத்த வேண்டும்.
- -நாகராஜன், தொழிலதிபர்.
கிருஷ்ணமாச்சாரி மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி லீக் ஆவதுண்டு. இங்கு ரோட்டின் மட்டம் உயர்ந்து, குடியிருப்புகள் பள்ளமாக ஆனதால் கழிவுநீர் வீட்டுக்குள் வருகிறது.
--- -கண்ணன், தனியார் ஊழியர்.
பாத்திமா நகர் தெரு ரேஷன் கடை காலியிடத்தில் நுாலகமோ சிறுவர் பூங்காவோ அமைத்தால் பயனாக இருக்கும். இல்லையென்றால் சமூக விரோத செயல் நடக்கும் இடமாக மாறிவிடும்.
- -ராமகிருஷ்ணன், வியாபாரி.
தாமிரபரணி குடிநீர் திட்டப் பணி குழாய் பதிக்கும் பணி முழுமையாக முடிந்து பயன்பாட்டுக்கு வந்ததும் தரமான குடிநீர் கிடைக்கும். தோண்டிய தெருக்கள் விரைவில் சீரமைக்கப்படும். பாதாள சாக்கடை இணைப்பு பணி முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வழங்க எம்.பி., நிதியில் 3 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- -மஞ்சுளா, 34வது வார்டு கவுன்சிலர்.