மதுரை: 'கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர் நியமிப்பதை விட முந்தைய நடைமுறையான இயக்குனரே நியமிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, தனியார் பள்ளிகள், தேர்வுத்துறை, பாடநுால் கழகம், முறைசாரா கல்வி என, பல பிரிவுகளுக்கு இயக்குனர்கள் இருந்தாலும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி தான், 'பவர்புல்' ஆனது.
இத்துறையில், சி.இ.ஓ.,வை அடுத்து இணை இயக்குனர், தொடர்ந்து இயக்குனர் என கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வில் வருவோர், துறை திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அனுபவம், செயல்படுத்தும் திறன் கொண்டவர்களாக இருந்தனர்.
இத்துறை இயக்குனராக கண்ணப்பன் இருந்தபோது வெளிப்படையாகவும், முறைகேடுகள் இல்லாமலும் ஆசிரியர் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி ஆசிரியர்களிடம் நற்பெயர் பெற்றார்.
அ.தி.மு.க., ஆட்சியில் இயக்குனர் பதவி, 'டம்மி' ஆக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு, சிஜிதாமஸ் முதல் முறையாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின் கமிஷனர், இயக்குனருக்கு உள்ள அதிகார பகிர்வில் குழப்பங்கள் நீடித்தன. தி.மு.க., ஆட்சியிலும் இது தொடர்ந்தது. கமிஷனராக நந்தகுமார் பொறுப்பேற்ற பின் இயக்குனர்கள் டம்மி ஆக்கப்பட்டனர்.
இதனால் மனமுடைந்த இயக்குனர்கள் பெரும்பாலும் கமிஷனருக்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர்.
கள நிலவரம் தெரியாத கமிஷனர்கள், உத்தரவு, அறிவிப்புகள் வெளியிடுவதும், அதை திரும்ப பெறுவதுமாக இருந்தனர்.
இந்நிலையில், கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டு, அப்பணியிடம் இன்னும் நிரப்பப்படவில்லை.
கமிஷனருக்கு பதில் முன் இருந்தது போல, கல்வித்துறை இயக்குனர் பணியிடமே தொடர வேண்டும் என, ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ராபர்ட் கூறியதாவது:
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை எளிதில் பார்க்க முடிவதில்லை; அவர்களுக்கும் கள நிலவரம் முழுமையாக புரிவதில்லை.
இத்துறையில் இருந்து வரும் இயக்குனர்கள் தான் இத்துறையின் நாடித்துடிப்பை தெரிந்து வைத்துள்ளனர்.
இயக்குனர் பணியிடமே தொடர்ந்தால், இத்துறையில் நிலவும் பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். இயக்குனரே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.