சாத்துார்: விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்த தாய் - மகள் வீட்டிலேயே இறந்து கிடந்தனர். அழுகிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன.
சாத்துார் படந்தால் நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி 97. இவரது மகள் அன்னலட்சுமி 75. தனலட்சுமிக்கு முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி மற்றும் முத்துச்சாமி என இரண்டு கணவர்கள் இருந்துள்ளனர்.
இருவரும் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். ராமசாமிக்கு, அன்னலட்சுமி என்ற மகளும், ராசு என்ற மகனும் இருந்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் ராசு இறந்து விட்டார்.
மகள் அன்னலட்சுமியின் கணவர் முத்துவேலும் உடல் நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், தாயும் மகளும் முத்துச்சாமி மகனான பாலகிருஷ்ணன் வீட்டில் தனியாக வசித்தனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணன் இரண்டு கிட்னியும் செயல் இழந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக தனலட்சுமி படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த 23ம் தேதி காலையில் பால் வாங்கிக் கொண்டு சென்ற அன்னலட்சுமி, கதவைப் பூட்டுப்போடாமல் சாத்திவிட்டு துாங்கச் சென்றார்.
கடந்த 27ம் தேதி அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவராமசந்திரன் என்பவர், ராஜபாளையத்தில் வசிக்கும் தனலட்சுமியின் மற்றொரு கணவர் முத்துச்சாமி மகனான மாரியப்பனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது தாயும் சகோதரியும் இறந்து கிடந்தனர். அழுகிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து, சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.