ராமேஸ்வரம்: -ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோவிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கடந்த 27ம் தேதி ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று முன் தினம் காலை 6:40 மணிக்கு கோவிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் பல்லக்கில் புறப்பாடாகினர்.
பின், தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவிலில் ராமர் எழுந்தருளினார். ராமாயண வரலாற்றை நினைவுகூரும் விதமாக கோவில் குருக்கள் சிரஞ்சீவி கூறியதாவது:
சீதையை விடுவிக்கும்படி இலங்கை மன்னர் ராவணனிடம், விபீஷணர் வேண்டுகோள் விடுத்தார். ராவணன் அதைக் கேட்காமல் அவமரியாதை செய்தார்.
உடனே, விபீஷணர் அங்கிருந்து வான் வழியாக புறப்பட்டு தனுஷ்கோடி வந்திறங்கினார்.
அங்கு ராமர், லட்சுமணர், அனுமன் உள்ளிட்ட வானர சேனைகளுடன் சீதையை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ராவணனின் ஒற்றனாக விபீஷணர் வந்திருப்பதாக அனுமன் கோபமடைந்தார்.
உடனே ராமர், அடைக்கலம் தேடி வருவோருக்கு பாதுகாப்பு கொடுப்பது தர்மம் எனக் கூறி நடந்ததை கேட்டறிந்தார்.
பின், லட்சுமணரிடம் கடல்நீரை எடுத்து வரும்படி கூறிய ராமர், இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து பட்டாபிஷேகம் சூட்டினார்.
இவ்வாறு குருக்கள் கூறினார்.
இதையடுத்து, கோவில் குருக்கள், விபீஷணருக்கு தலைப்பாகை அணிவித்து பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதைத் தொடந்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.