கோவை: பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், இளநிலை தேர்வுகளே முடியாத நிலையில், முதுநிலை பாடங்களுக்கு 'அட்மிஷன்' அறிவிக்கப்பட்டதால், பேராசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பாரதியார் பல்கலையின் கீழ், 142 கல்லுாரிகள் உள்ளன. தன்னாட்சி கல்லுாரிகள் தவிர மற்ற கல்லுாரிகளில், இளநிலை மூன்றாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. மதிப்பீட்டு பணிகள், ஜூன் 21ம் தேதி துவங்குகிறது.
தேர்வுகளே முடியாத நிலையில், பாரதியார் பல்கலையில் முதுநிலை பாடங்களுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வரும் 31ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு நடக்கும் நிலையில், முதுநிலை பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழலில் மாணவர்கள் இருப்பதாக, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசு பல்கலை ஆசிரியர் சங்க துணை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ''பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன. இதை அறிந்தும், முதுநிலை பாடங்களுக்கு அட்மிஷன் துவங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இந்த அறிவிப்பால், பல்கலையில் நேரடியாக படிக்க காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர்,'' என்றார்.
பாரதியார் பல்கலை பதிவாளர் (பொ) முருகவேல் கூறுகையில், ''துணைவேந்தர் கமிட்டியில் உள்ள இருவர் வெளிநாட்டில் இருப்பதால், அவர்களுடன் கலந்தாலோசித்து, முதுநிலை பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.