சுக்காலியூரில் திறந்தவெளியை
கழிப்பிடமாக பயன்படுத்தும் மக்கள்
கரூர் அருகே சுக்காலியூரில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியினர் பயன்பாட்டுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இக்கழிப்பிடம் பல மாதங்களுக்கு முன் பழுதானது. இதை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளது. இதனால், பொது மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அப்பகுதியில்
சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை, சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு
கொண்டுவர, கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடாங்கிபட்டியில் எரியாத
தெரு விளக்குகளால் மக்கள் அவதி
கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. பலமுறை அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், இரவு நேரத்திலும், வழிப்பறி கொள்ளை அதிகரித்து வருகிறது. மேலும், தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு
நேரத்தில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். இதனால்,
கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய
வைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.
வழிகாட்டி போர்டை
மாற்ற வேண்டுகோள்
கரூர்-ஈரோடு சாலை குந்தாணிப்பாளையத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில், கிராம ஊர் பெயர் அடங்கிய, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன ஓட்டிகளுக்கு, பெயர் பலகையில் இருந்த, ஊர்ப்பெயரின் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, பலகை சாய்ந்த நிலையில், எந்தநேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. ஊர் பெயர்களின் எழுத்துகளும் வெளுத்து விட்டது. புதிதாக அப்பகுதியை கடப்பவர்கள், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். இதனால், புதிதாக ஊர் பெயர்களை எழுதி, போர்டையும் மாற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.