கிருஷ்ணகிரி: ''கள்ளச்சாராய உயிர் பலிகளுக்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.
தி.மு.க., அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, காவல்துறையை கையில் எடுத்துக் கொண்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி உள்ளது. கள்ளச்சாராயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலர் இறந்துள்ளனர். தஞ்சாவூரில் போலி மதுவால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.
துாத்துக்குடியில் மணல் கடத்தலை தடுத்த, வி.ஏ.ஓ., படுகொலை செய்யப்பட்டுள்ளார். கரூரில் மத்திய அரசின் அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், நகர செயலாளர் கேசவன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.