கிருஷ்ணகிரி: தன்னார்வ தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து, கிராமப்புற இளைஞர்களுக்கான மூன்று மாத சான்றிதழ் படிப்பு, ஐ.நா., சபையின் தன்னார்வ தொண்டு குறிக்கோள்களை மையப்படுத்தி தமிழ்நாட்டிலே முதல் முறையாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதில், 18 வயது நிரம்பிய, பிளஸ் 2 படித்தவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியை மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நிறுவனம் மற்றும் கோயம்புத்துார் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகிறது. ஐந்து நாட்கள் நேரடி வகுப்புகளும், 5ம் நாள், பஞ்சாயத்துக்கு களப்பயணம் சென்று, அங்குள்ள பணிகளை பற்றி விளக்கமும் அளிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் தன்னார்வ தொண்டு புரிய வாய்ப்புள்ள நிறுவனங்கள் வாரியாக, 5 களப்பயணம் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மூன்று மாத இறுதியில், பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி, பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று துவங்கிய இந்த பயிற்சி வகுப்பை, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் துவக்கி வைத்து, பயிற்சி கையேட்டை வழங்கினார். இதில், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சாந்தி, பஞ்., உதவி இயக்குனர் மகாதேவன், பி.டி.ஓ.,க்கள் முருகன், ராஜேஷ், மாவட்ட வள மைய அலுவலர் நிக்கோலா பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியில், 30 பேர் கலந்து கொண்டனர்.