தர்மபுரி: தர்மபுரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விபத்து, நீரில் மூழ்கி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, 20.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 459 பேர் மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சாந்தி, அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, விரைந்து தீர்வு காண உத்தரவிட்டார். மேலும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து, பணியின்போது இறந்த, ஐந்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கலெக்டர் சாந்தி, 17.10 லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும், நீரில் மூழ்கி இறந்த, இருவரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம், பாம்பு கடித்து இறந்தவரின் குடும்பத்துக்கு, ஒரு லட்ச ரூபாய் என, தமிழக அரசு சார்பாக மொத்தம், 20.10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.