ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, பெலத்துாரில் இயங்கிய, 'ஏசியன் பேரிங்' என்ற தனியார் நிறுவனத்தில், 700 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த, 2006 ஜன., 9ல், நிறுவனம் மூடப்பட்டதால், தொழிலாளர்களுக்கு நான்கு மாதம், எட்டு நாட்கள் மற்றும் பணியாளர்களுக்கு எட்டு மாதம் ஊதியம் வழங்கவில்லை.
மேலும், 2005 மே, 5க்கு பின் விருப்பஓய்வு பற்றி பேசலாம் என, நிர்வாகம் கூறிய நிலையில், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் என மொத்தம், 250க்கும் மேற்பட்டோருக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய தொகையை அந்நிறுவனம் வழங்கவில்லை. இது தொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், அதை அந்நிறுவனம் அமல்படுத்தாமல் உள்ளது.
இதனால், அரசே நிறுவனத்தை ஏற்று நடத்த வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில், நிறுவனம் முன்பிருந்து, சென்னை கோட்டை வரை, நேற்று நடைபயணம் துவங்கியது. இதை, ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் மனோகரன் துவக்கி வைத்தார்.
பாகலுார் பஸ் ஸ்டாண்டில், கோரிக்கையை வலியுறுத்தி நடந்த கூட்டத்தில் பங்கேற்று விட்டு, நடைபயணத்தை துவங்க தொழிலாளர்கள் ஆயத்தமாகினர். அப்போது, ஓசூர், சப்
கலெக்டர் சரண்யா பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அதனால், தொழிலாளர்கள் நடைபயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, சப்கலெக்டர் அலுவலகம் புறப்பட்டுச்
சென்றனர்.