அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. இதன் மூலம், வள்ளிமதுரை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், கம்மாளம்பட்டி, ஒடசல்பட்டி, கல்லடிப்பட்டி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், வரட்டாறு தடுப்பணையின் இடதுபுற வாய்க்காலை நீட்டிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
மழைக்காலங்களில் தடுப்பணை நிரம்பியவுடன் அதிலிருந்து, உபரி நீர் வீணாக வெளியேறி தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இதை தடுக்கும் வகையில், மழைக்காலங்களில் வீணாகும் உபரிநீரை, ஏரிகளில் நிரப்புவதுடன், பராமரிப்பு இல்லாமல் உள்ள வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் துார்வார வேண்டும். மேலும், இடதுபுற வாய்க்காலை டி.புதுார், பேதாதம்பட்டிசெட்டி ஏரி வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.