தர்மபுரி திறந்தவெளி நெல் கிடங்கில் 7000 டன் நெல் மூடைகள் மாயமானதாக நுகர்பொருள் வாணிப கழக விஜிலென்ஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி கலெக்டர் பங்களாவுக்கு பின் திறந்தவெளி நெல் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இறக்கப்பட்ட மொத்த நெல் மூடைகளில் பல டன் நெல் மூடைகள் மாயமானதாக சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக விஜிலன்ஸ் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் ஆய்வு செய்ததில் 7000 டன் நெல் மூடைகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறியதாவது:
விஜிலன்ஸ் பிரிவு சோதனையில் 7000 டன் நெல் மூடைகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சோதனையில் நெல் மூடைகள் குறைய வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.
அதிகாரிகள் அறிவுறுத்தல்படி தற்போது 7000 டன் நெல் மூடைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 ஆயிரம் டன் நெல் மூடைகளும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன் முடிவில் நெல் மூடை எண்ணிக்கை குறைந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விஜிலென்ஸ் அதிகாரிகள் 7000 டன் நெல் மூடைகள் மாயமாகி விட்டதாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால் வாணிப கழக அதிகாரிகள் அதை மறுத்துள்ளது இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.