'திருச்சி அருகே நரசிங்கபுரத்தில் செம்மண் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் நரசிங்கபுரத்தில் செம்மண் கடத்தியோரை தடுத்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, சிலர் கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன் கூறியதாவது:
சமீபத்தில் துாத்துக்குடி மாவட்டத்தில் இதேபோல மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ., ஒருவர் கொலை செய்யப்பட்டார். தற்போது திருச்சி மாவட்டத்தில் கொலை முயற்சி நடந்துள்ளது. இது தொடர்வதால் வருவாய் அலுவலர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று வருவாய் அலுவலர்களை செயல்பட விடாமல் தாக்கிய ஊராட்சித் தலைவரின் பதவியை பறிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
திருச்சியில் நடந்த சம்பவத்திற்காக இன்று வருவாய் அலுவலர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அரசு அனுமதிக்கக் கூடாது, என்றார்.