திருப்பூர்: ''வீடு தேடிச்சென்று மதுபாட்டில் விற்கும், 'மொபைல் பார்' முறைகேடு, படுவேகமாக வளர்ந்து வருகிறது,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக்கிடப்பதால், மக்கள் காட்டாட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர். தமிழகத்தில், பல்வேறு தொழில்களின் நிலை படுமோசமாக இருக்கிறது; இக்கட்டான நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஜப்பான், சிங்கப்பூருக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.
'டாஸ்மாக்' மது விற்பனையில், முறைகேடும், மோசடியும் அதிகரித்துவிட்டது. தமிழகம் முழுவதும், 24 மணி நேரமும் டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது; குடும்பங்கள் நாசமாகி வருகின்றன. அதுமட்டுமல்ல, 'மொபைல் பார்' என்ற புதிய கலாசாரமும் பரவியுள்ளது.
வீடு தேடிச்சென்று மதுபாட்டில் விற்கும் முறைகேடு, படுவேகமாக வளர்ந்து வருகிறது. ஏழைகளின் கண்ணீர் கூர்மையான வாளுக்கு சமம்; பாதகம் செய்பவர்களை பழிவாங்காமல் இருக்காது.
இவ்வாறு, அவர் பேசினார்.