பொள்ளாச்சி: ''வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்ததே இந்த ஆட்சியின் சாதனையாகும்,'' என, பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''வெயிலின் தாக்கத்தை விட, தி.மு.க., ஆட்சியில் தாக்கம் அதிகமாக உள்ளது. இரண்டாயிரம் ரூபாய் செல்லாது எனக்கூறியதும் முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமே பதட்டம் ஏற்பட்டது.
பொள்ளாச்சியில், 24 மணி நேரமும், பைக்கில் வந்து மது விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதை தடுக்காவிட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். கனிமவளங்கள் அதிகளவு கடத்தப்படுகின்றன. இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடியது போன்று, தி.மு.க., ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட வேண்டிய நிலை வரும்,'' என்றார். முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''எந்த திட்டமும் கொண்டு வராமல், இரண்டு ஆண்டுகளை கடந்ததில் தான் முதன்மையான ஆட்சியாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக முன்னாள் நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார். அது உண்மை என்பது போன்று அவரை வேறு துறைக்கு மாற்றி விட்டனர்.
வீதிக்கு ஒரு டாஸ்மாக் மதுக்கடைகள் கொண்டு வந்ததே இந்த ஆட்சியின் சாதனையாகும். கனிமவளங்கள் கொள்ளை, கள்ளச்சாராயம் விற்பனை, கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. தினமும், 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது, ஆட்களை நியமித்து வசூல் செய்து ஸ்டாலின் குடும்பத்தினர் கொள்ளையடிக்கின்றனர். கோவைக்கு என எந்த திட்டமும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,'' என்றார்.
சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி மற்றும் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.