புதுக்கோட்டை: ''மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால நிவாரண உதவி உயர்த்தி வழங்கப்படும்,'' என, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பண்ணையில், நேற்று, தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டில் நிர்வாக காரணங்களுக்காக, ஆன்லைன் பதிவு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அது கட்டாயம் அல்ல. மீனவர்களுக்கான மீன்பிடி தடைகால நிவாரண உதவித் தொகையையும், டீசல் மானியத்தையும் முதல்வர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி - டாக்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, புதிய டிரான்ஸ்மீட்டர் செயல்பாட்டை, தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இலங்கை கடற்படையிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளில், 40 படகுகள் மட்டுமே மீண்டும் கொண்டு வர தகுதி வாய்ந்ததாக உள்ளன. படகுகளை பறிகொடுத்த மீனவர்களுக்கு, தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்கி வருகிறது. அதை கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கால்நடைத் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடைமுறையை வகுத்து விட்டு நிரப்புவோம்.
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில், மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு, படகுகள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், பால் உற்பத்தி குறையவில்லை. தனியார் பால் நிறுவனங்கள், உற்பத்தியாளர்களிடம் கூடுதல் விலைக்கு பால் வாங்குவதால், தட்டுப்பாடு இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு முறையாக தான் சப்ளை செய்யப்படுகிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையவில்லை. தீவனங்கள் உற்பத்தியில் சுணக்கம் உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.