புதுக்கோட்டையில், நேற்று, அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று, ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.
தமிழர்களின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது, என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் மாறி மாறி அவரவர் கட்சி தலைவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், ஜல்லிக்கட்டு காளைகளோடு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அ.தி.மு.க., சார்பில், என்னையும் இணைத்துக் கொண்டு, வக்கீல்கள் சிறப்பாக வாதாடினர். அதன் காரணமாகவே, ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டது. இதற்கு, முழு முதல் காரணம் அ.தி.மு.க., தான்; தி.மு.க.,வினர் சொந்தம் கொண்டாட முடியாது.
எனவே, தி.மு.க., சார்பில் பாராட்டு விழா நடத்தினால், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்படும், என்றார். முதல்வருக்கு பாராட்டு: இந்நிலையில், தி.மு.க., சார்பில், புதுக்கோட்டையில், ஜூன் 5ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதற்காக, நேற்று, ஒன்பது அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.