பல்லடம் நகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு அனுமதிக்காததால், நகராட்சி தலைவர் சர்வாதிகாரத்தில் ஈடுபடுவதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி தலைவராக திமுக.,வைச் சேர்ந்த கவிதாமணி உள்ளார். நகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வருகை தந்த பத்திரிகையாளர்களை வெளியே செல்லுமாறு நகராட்சித் தலைவர் தெரிவித்தார். பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பதாகவும், எந்த சட்ட திட்ட விதிமுறையில் இது உள்ளது என்றும், நகராட்சி தலைவரிடம் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதால் யாருக்கும் அனுமதி கிடையாது. இதற்கு நகராட்சி தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. கவுன்சிலர்களின் கையொப்பம் பெற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கவிதாமணி கூறினார்.
இதேபோல், ' கூட்டத்துக்கு யாரை அனுமதிப்பது என்பதை முடிவு செய்ய தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும், 18 வார்டு கவுன்சிலர்களும் கையெழுத்து இட்டுள்ளனர் என, கமிஷனர் விநாயகம் கூறினார். இவர் கூறியதை கேட்டு கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் சிலர், எங்களிடம் இது குறித்து தெரிவிக்கவில்லை. நாங்கள் கையெழுத்தும் இடவில்லை என்றனர். இதையடுத்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
நகராட்சி தலைவர் கவிதாமணியின் கணவர் ராஜேந்திரகுமார். இவர் திமுக., நகர செயலாளராக உள்ளார். சமீப நாட்களாக, இவர் மீது செக் மோசடி, நில மோசடி வழக்குகள் காரணமாக, பல்லடம் கோர்ட் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது. மேலும், நகராட்சி கூட்டம் நடத்தப்படாமலேயே, கூட்டம் நடந்ததாக கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. டெண்டர் நடத்தாமல் நகராட்சி குப்பைக்கான டெண்டர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மேற்கூறிய சம்பவங்கள், முறைகேடுகள் குறித்து, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதை கருத்தில் கொண்டே, நகராட்சி கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் நகராட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் வெளியே தெரிந்து விடும் என்பதால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை உண்மை.