தஞ்சாவூர்:தஞ்சாவூரில் கதிர் வரும் நேரத்தில் கோடை மழை பெய்ததால், 500 ஏக்கர் நெற்பயிர் நாசம் அடைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 1,000 ஏக்கரில் கோடை சாகுபடி நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையால், கதிர் வரும் நிலையில் வளர்ந்திருந்த நெற்பயிர்கள் நாசம் அடைந்தன.
இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
விதைத்து, 115 நாட்களில் விளைச்சல் தரும் நெல் ரகம் நடவு செய்தோம்.
இன்னும், 20 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். திடீரென பெய்த மழையால், பயிர்கள் நாசம் அடைந்து விட்டன.
ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தோம்.
பயிர்கள் நாசம் அடைந்ததால், இதை அறுவடை செய்ய கூடுதல் செலவு ஏற்படும். 10 மூட்டை வர வேண்டிய இடத்தில், வயலில் சாய்ந்துள்ள பயிர்களை அறுவடை செய்தால், மூன்று மூட்டை மட்டுமே மகசூல் கிடைக்கும்.
எனவே, வேளாண் அதிகாரிகள் கணக்கீடு செய்து, பயிர்க் காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.