திருப்பூர்:புதிய தொழில் முனைவோருக்கு, முதலீட்டில், 35 சதவீதம் அளவுக்கு மூலதன மானியம் வழங்கும், 'அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில், 'அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்., 1க்கு பின் துவங்கிய புதிய நிறுவனம் மற்றும் இயங்கும் நிறுவன விரிவாக்க முதலீடுகளுக்கு பொருந்தும்.
இந்தத் திட்டத்தில், எஸ்.சி., -எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த, 18 முதல், 55 வயதுக்கு உட்பட்டோர் பயன்பெறலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் நிர்ணயிக்கவில்லை. தகுதியான விண்ணப்பதாரருக்கு, 100 கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள முதலீட்டுக்கு, 35 சதவீதம் மூலதன மானியமாக வழங்கப்படும். மானிய உச்சவரம்பு என்பது, 1.50 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.
நேரடி விவசாயம் மற்றும் பால் உற்பத்தி, கோழி, மீன், இறால், தேனீ, பட்டுப் பூச்சி வளர்ப்பு போன்ற பண்ணை அல்லாத நடவடிக்கைகள், பண்ணை உபகரணங்களை வாடகைக்கு அமர்த்தும் வணிகம் போன்றவற்றை உள்ளடக்கிய முதலீடுகள் இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றன.
குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள், மாநாட்டு மையங்கள், திருமண மண்டபங்கள், விடுதி, பெட்ரோல் பங்க், எரிவாயு ஏஜென்சி ஆகியவற்றின் வணிக திட்ட அறிக்கையும் இந்தத் திட்டத்தில் ஏற்கப்படுமென அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஆடிட்டர் அஸ்வின் அரசப்பன் கூறியதாவது:
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், தொழில் முனைவோராக உயர வேண்டும் என்ற அடிப்படையில், 'அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டு திட்டங்களுக்கு, 35 சதவீதம் வரை மானிய உதவி கிடைக்கும்.
வங்கிக் கடனில், வட்டி விடுமுறை நாட்களுக்கும் ஆறு சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில், சொந்தப் பணத்தில் முதலீடு செய்திருந்தாலும் சரி, வங்கிக்கடன் வாயிலாக முதலீடு செய்திருந்தாலும், மானியத்துக்கு ஏற்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
எஸ்.சி., - எஸ்.சி., சமூகங்களை சேர்ந்த வருங்கால புதிய தொழில் முனைவோருக்கு, 'அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ்' திட்டம் ஒரு வரப்பிரசாதம்.
இவ்வாறு அவர் கூறினார்.