தஞ்சாவூர்:கணவனை இழந்த ஒரு பெண், நம்பிக்கையை கைவிடாமல் தஞ்சை ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு, பெண்கள் பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாலக்கரையைச் சேர்ந்தவர் நாகலட்சுமி, 38. இவரது கணவர் சரவணன், 10 ஆண்டுகளுக்கு முன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இவருக்கு தீபஸ்ரீ என்ற மகள், சந்தோஷ் என்ற மகன் உள்ளனர். கணவன் இறந்ததால் குடும்பம் வறுமை நிலைக்கு சென்றது.
நாகலட்சுமி நம்பிக்கையை இழக்காமல், தஞ்சை ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார். பின், கற்றுக் கொண்ட கலையை, தன்னைப் போல் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து, நாகலட்சுமி கூறியதாவது:
கணவர் உயிருடன் இருக்கும் வரை, வீட்டு வாசலை கூட தாண்டியதில்லை. அவர் மறைவுக்குப் பின், வாழ்க்கை மாறியது. எந்த உறவும் உதவ முன் வரவில்லை. கும்பகோணத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், முறைப்படி தஞ்சை ஓவியம் வரைய கற்றுக் கொடுத்தார். அவரது வீட்டிலேயே தனியாக தஞ்சை ஓவியம் தயாரிக்க துவங்கினேன்.
நான் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்ய, அவரே உதவினார். தற்போது மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மகள் பத்தாம் வகுப்பும், மகன் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர்.
தற்போது, என்னைப் போல் கணவரை இழந்த, சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு தஞ்சை ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கிறேன்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். இது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.