திருப்பூர்:திருப்பூர் செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு சொந்தமான 19 ஏக்கர் நிலம், பல்லடம் தாலுகா, மாதப்பூரில் உள்ளது. சகோதர்களிடையே பாகப்பிரிவினை செய்து, பட்டா மற்றும் பெயர் மாற்றம் செய்யவும், சிட்டாவில் இருந்து பெயர் நீக்கவும், 2013ல் விண்ணப்பித்தனர்.
இதற்காக, பல்லடம் தாலுகா அலுவலக பிர்க்கா சர்வேயர் கருப்பையா, பாகப்பிரிவினை செய்து கொடுக்க எட்டாயிரம் ரூபாய் ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
அதிர்ச்சியடைந்த தண்டபாணி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீஸ் அறிவுரைப்படி லஞ்சம் கொடுத்தார்.
அப்போது, தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சர்வேயர் கருப்பையாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணை முடிந்த நிலையில், கருப்பையாவுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் மற்றும் ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோவை மத்தியச் சிறையில் கருப்பையா அடைக்கப்பட்டார்.