திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே கன்டெய்னர் லாரியில் கடத்திய 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளியில், தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார், ஆண்டபட்டு பள்ளி வாலுார் அருகே, நள்ளிரவு 12:00 மணிக்கு வாகன சோதனை நடத்தினர்.
அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்த சைகை காட்டினர். போலீசைக் கண்டதும் கன்டெய்னர் லாரி டிரைவர், வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.
அதில் சோதனை நடத்தியதில் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது. கன்டெய்னர் லாரியுடன் அரிசியை கைப்பற்றினர். நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அரிசி ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல, காரைக்குடி அருகே கழனிவாசல் சூரக்குடியில் குடிமைபொருள் குற்றத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., சோமசுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
சரக்கு வேனில் கடத்தி வந்த 2,320 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கண்ணன், கம்பூர் சுரேஷ், சேவுகன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காரைக்குடி அருகே சூரக்குடியில் நடந்த சோதனையில், மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 630 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டியைச் சேர்ந்த உப்பு வியாபாரி ரகுபதி என்பவரை கைது செய்யப்பட்டார்.